Librería Samer Atenea
Kálamo Books
Librería Elías (Asturias)
Librería Kolima (Madrid)
Librería Proteo (Málaga)
கோடை காலத்தில், இரவில், திறந்த மேல் மாடியில், காற்றாடப் படுத்திருப்பதைப் போன்ற இன்பகரமான காரியம் வேறு கிடையாது என்பது என் அனுபவம். வானத்திலே சந்திரனும், அண்டையிலே அன்பர்களும் இருந்துவிட்டால் சிலாக்கியந்தான். இல்லா விட்டாலும் பாதகமில்லை. நிலவில்லாத முன்னிருட்டு இரவுகளில், பல்லாயிரங் காதங்களுக்கு அப்பாலிருந்து கொண்டு சுழன்று நம்மைப் பார்த்துக் கண் சிமிட்டும் நட்சத்திரங்களும் அத்தனிமையிலே நமக்கு மிகவும் நெருங்கிய நண்பர்களாகத்தான் காட்சியளிக்கின்றன. அவற்றைப் பார்த்துக் கொண்டே படுத்துக் கிடப்பதில் தான் என்ன பேரானந்தம் இருக்கிறது! எல்லையற்ற இன்பம் அது. பார்க்கப் பார்க்க மனிதனுடைய புண்பட்ட உள்ளத்திலே ஒரு சாந்தியும் அமைதியும் குடியேறி நிலைக்கின்றன. ஆயுள்காலம் முழுவதையும் அந்த நட்சத்திரங்கள் மின்னும் வானத்தைப் பார்த்துக் கொண்டே கழித்து விடலாமே என்று தோன்றுகிறது. ஆயுள் காலத்தைமட்டுந்தானா? அதற்கப்பாலுள்ள 'காலன் கடந்த காலத்தையும்' அப்படியே கழித்துவிடலாம். பகல் என்று ஒன்று தோன்றுவானேன்? நம்முடைய சகோதரர்களின் கண்ணில் நாம் படுவானேன்? தினசரி அல்லல் தொல்லை பூசல்களில் அகப்பட்டு உழன்று சாவானேன்? பகலெல்லாம், அற்ப விஷயங்களை எண்ணி எண்ணி ஏங்கி, ஆடிப்பாடி, ஓடித் திரிந்து உழைத்து ஓய்வதெல்லாம் வீண்தானே என்று அப்பொழுது தோன்றுகிறது. வானத்திலே எப்பொழுதுமே நட்சத்திரங்கள் இருக்கலாகாதா? வாழ்க்கையின் வியர்த்தத்தையும், துன்பங்களையுமே காட்டும் சூரிய ஒளி ஏன் தோன்றவேண்டும்? மனிதன் நட்சத்திர ஒளியிலேயே, இன்பகரமான வாழ்க்கை நடத்துவதென்பது முடியாத காரியமா?