Librería Samer Atenea
Kálamo Books
Librería Elías (Asturias)
Librería Kolima (Madrid)
Librería Proteo (Málaga)
திருவள்ளுவரால் இயற்றப்பெற்ற திருக்குறள் தமிழ்நூல் மட்டுமன்று; தமிழர் நூல் மட்டுமன்று; உலக மொழிகள் பலவற்றுள் மொழிபெயர்க்கப் பெற்றுள்ளதோர் உலக நூலாகும். இந்நூல், வடமொழி, இந்தி முதலிய இந்திய மொழிகளிலும், ஆங்கிலம், பிரெஞ்சு, செர்மனி, இலத்தின் முதலிய ஐரோப்பிய மொழிகளிலும் பெயர்த்தெழுதப் பெற்றுள்ளது. இதனால் இதனை 'உலகமறை' என்றும் பொதுமறை' என்றும் புகழ்ந்து கூறுவதுண்டு. பாரதியாரும் 'வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ்கொண்ட தமிழ்நாடு' என்று பாராட்டிப் போந்தார்.இத்தகைய திருக்குறளின் மாண்பினைப் பெரும்பாலான தமிழர்கள் இன்னும் அறிந்திலர், கற்றிலர். இவர்கள் எங்கே இதனை உலகிற்கு அறிமுகஞ் செய்து பரப்பப் போகின்றார்கள்? இவ்வாறு தமிழர்கள் தன்னை மறந்தாலும், திருக்குறள் தமிழர்களை மறந்திலது. தனது கருத்து வன்மையால் உலக மக்களைக் கவர்ந்து, அவர்தம் மொழிகளிற் பெயர்க்கப்பெற்றுத் தமிழையும் தமிழ் மக்களையும் உலகிற்கு அறிமுகஞ் செய்து வைத்திருக்கிறது இந்நூல். இவ்வரும்பெருஞ் செல்வத்தை அருளிப்போந்த திருவள்ளுவனார்க்கு உலகம் யாது கைம்மாறு செய்யவல்லதோ!வள்ளுவப் பெருந்தகையார் திருக்குறளை அறத்துப்பால்,பொருட்பால், இன்பத்துப்பால் என மூன்று பகுதிகளாகப் பிரித்துள்ளார். இம்மூன்றனுள் அறத்தினை இல்லறம், துறவறம் என இரண்டாகப் பகுத்துள்ளார். வள்ளுவனார் இல்லறத்தை இருபது அதிகாரங்களுள் விளக்கியுள்ளார். இவ்விருபதனுள் மிகவும் இன்றியமையாத 'இல்வாழ்க்கை', 'வாழ்க்கைத் துணைநலம்', 'மக்கட்பேறு' என்னும் முதல் மூன்று அதிகாரங்களை மட்டும் ஈண்டு எடுத்துக் கொள்ளலாம்.