Librería Samer Atenea
Kálamo Books
Librería Elías (Asturias)
Librería Kolima (Madrid)
Librería Proteo (Málaga)
கடவுளோடு இரண்டறக் கலந்து வாழக் கூடிய பக்குவம் பெறாதவர்கள், கடவுளோடு கலந்து வாழ்கின்றவர்களோடவாவது வாழ முயற்சி செய்ய வேண்டும் என்று சொல்வார்கள் அறிஞர்கள். இப்படி முயற்சி செய்தால் நமது மனம் ஒழுங்குபடும். அது, தன்னுடைய இஷ்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்லாமல் நம்முடைய இஷ்டத்திற்கு அது வரும். அப்படி வருமானால் அதனைக் கடவுளின் பக்கம் திருப்பலா மல்லவா? இதனாலேயே சத் சங்கம் வேண்டுமென்று சொல்கிறார்கள் பெரியோர்கள்.ஸ்ரீ ராமகிருஷ்ணர், கடவுளைக் கண்ட ஒரு மகா புருஷர். இவரைப் பற்றிச் சொல்வது கடவுளைப் பற்றிச் சொல்வதாகும். இவரை அறிவது ஹிந்து மதத்தை அறிவதாகும். ஹிந்து மதமானது யாரையும் அந்நியர் என்று கருதுவதில்லை. எல்லோரும் ஒரு தாய் வயிற்றுக் குழந்தைகள் என்றே ஹிந்து மதம் அநாதிகாலந் தொட்டு கோஷித்துக் கொண்டு வருகிறது. இந்தக் கோஷம் உலகெங்கும் பரவவேண்டும். பலவித வேற்றுமைகளுக்கும் குழப்பங்களுக்கும் ஆட்பட்டிருக்கிற இன்றைய உலகத்திற்கு ஹிந்து மதத்தின் சாரத்தை ஊட்டுவது பிரதியொரு ஹிந்துவினுடைய கடமையுமாகும். இந்தக் கடமையைச் செய்வதற்கு இந்தச் சிறிய நூல் ஒரு தூண்டு கருவியா யிருக்குமானால் அது யான் பெற்ற பேறாகும்.ஒரு நாட்டின் பெருமை அதனை ஆளும் அரசர்களிடத்திலே இல்லை; அதனை ஆட்டி வைக்கும் அரசியல் வாதிகளிடத்திலேயு மில்லை. பண பலமோ புய வலியோ படைத்தவர்களாலும் ஒரு நாட்டிற்குப் பெருமையைத் தேடித் தர முடியாது. வற்றாத நதிகளும் குறையாத சுரங்கங்களும் ஒரு நாட்டினுடைய செழுமையை அதிகரிக்கச் செய்யமாட்டா. உயர்ந்த மலைகளும் மதில்களும், அழகிய கட்டிடங்களும் கோயில்களும் ஒரு நாட்டினுடைய உயர்வுக்கும் பண்பாட்டிற்கும் சாட்சிகளாக மாட்டா.