Librería Samer Atenea
Kálamo Books
Librería Elías (Asturias)
Librería Kolima (Madrid)
Librería Proteo (Málaga)
இயற்கை பல அழகிய வடிவங்களாய்க் காட்சியளிக்கிறது. அக்காட்சியை மறுப்போரில்லை. இயற்கையைக் கூர்த்த மதியால் ஆராய ஆராய அதன் உள்ளுறையொன்று உணர்வில் உறுகிறது. இயற்கை உடல்; அதன் உள்ளுறை உயிர். உயிரை முருகு அல்லது முருகன் என்று தமிழ்நாட்டார் கொண்டனர். இவ்வுடலையும் உயிரையும் உலகம் ஆராய்ந்த வண்ணமிருக்கிறது. அவரவர் ஆராய்ச்சியிற் போந்த உண்மைகளும் பலப்பல. இன்னும் ஆராய்ச்சி வளர்ந்து வருகிறது.முருகனைப் பற்றிய பலதிறக் கொள்கைகள், கதைகள், கட்டுகள் நாட்டில் உலவுகின்றன. முதல் முதல் முருகனுண்மை கண்ட பழந்தமிழர், முருகனை எவ்வாறு கொண்டனர் என்று ஆராயத் தலைப்பட்டதில், அவர் முருகை, மணமும், இளமையும் கடவுட்டன்மையும் அழகுமுடைய செம்பொருளாகக் கொண்டனர் என்பதும் பிறவும் விளங்கின. இக்கொள்கை அடியேனுக்கு மிக விழுமியதாய்த் தோன்றிற்று. இவ்விழுமிய கொள்கை நாட்டில் நிலைபெறின், நாட்டுக்குப் பலவழியிலும் நலன் விளையுமென்னும் வேட்கை என்மாட்டெழுந்தது. வேட்கை மேலீட்டான், அமயம் வாய்ந்துழி வாய்ந்துழி, விழுமிய கொள்கையைப் பற்றிப் பேசியும் எழுதியும் வருகிறேன்.காரைக்குடியினின்றும் முகிழ்த்த குமரன் என்னுந் திங்கள் மலரின் முதலிதழில், என்னால் எழுதப்பெற்ற முருகன் என்னுஞ் சிறு கட்டுரை யொன்று வெளிவந்தது. அக்கட்டுரையைக் கண்ட நண்பர் சிலர், அதை நூல் வடிவாக வெளியிடுமாறு, கடிதம் எழுதிக் கொண்டேயிருந்தனர். அக்கட்டுரை ஒரு திங்கள் தாளுக்கென எழுதப்பட்டமையான், அதை யான் நினைந்த வண்ணம் எழுதல் இயலாமற் போயிற்று. அன்பர்கள் விழைந்தவாறு, பின்னை, அக்கட்டுரையை முதன் முறை நூலாக்க முயன்றபோதும், அதனிடை, நினைந்த பல பொருள்கள் சேர்க்கப் போதிய ஓய்வு கிடைக்கவில்லை.