Librería Samer Atenea
Kálamo Books
Librería Elías (Asturias)
Librería Kolima (Madrid)
Librería Proteo (Málaga)
'பம்மல் விஜயரங்க முதலியார் இரண்டாவது விவாகத்தின் நான்காவது குமாரன் திருஞான சம்பந்தம் 1873-ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் 1-ந் தேதிக்குச் சரியான ஆங்கீரச வருஷம் தை மாதம் 21ந்தேதி சனிக்கிழமை உத்திராட நட்சத்திரத்தில் ஜனனம் சென்னப்பட்டணத்தில்' என்று என் தகப்பனார் விஜயரங்க முதலியார் எழுதி வைத்துவிட்டுப்போன குடும்ப புத்தகத்தில் அவர் கையெழுத்திலிருக்கிறது. நான் இப்போது இதை எழுதத் தொடங்கும்போது வசிக்கும் ஆச்சாரப்பன் வீதி 70-ஆம் நெம்பர் வீட்டில் முதற்கட்டில் வடகிழக்கு மூலையில் உள்ள அறையில் நான் பிறந்ததாக என் தாயார் எனக்கு சொன்னதாக ஞாபகமிருக்கிறது.பூவுலகில் மனிதனாய் பிறக்கும் ஒவ்வொருவனைப் பற்றியும் இரண்டு விஷயங்கள் நிச்சயமாய் கூறலாம், அவன் ஒரு நாள் பிறந்திருக்கவேண்டும். அவன் ஒருநாள் இறக்க வேண்டுமென்பதாம், ஆயினும் இவ்விரண்டு விஷயங்களைப் பற்றியும் அவன் நேராகக் கூறுவதற்கில்லை. பிறந்ததைப்பற்றி மற்றவர்கள் கூறுவதைத்தான் நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். இறந்ததைப் பற்றியும். மற்றவர்கள் பின்கூற வேண்டுமல்லவா?என் தகப்பனாரைப் பற்றி சில வார்த்தைகள் எழுத விரும்புகிறேன். மேற்குறித்த புத்தகத்தில் அவர் கையெழுத்திலிருக்கும் சில குறிப்புகளை இங்கு எடுத்து எழுதுகிறேன். அவர் பிறந்தது. 1830-ஆம் வருஷம் மார்ச் மாதம் 1-ந்தேதி ரோகிணி நட்சத்திரம் ஸ்ரீ கிருஷ்ணன் பிறந்த ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தபடியால் அவரது அம்மானுக்கு ஏதாவது கெடுதி நேரிடுமென்று பயந்திருந்தார்களாம், ஆயினும் அப்படி ஒன்றும் கெடுதி நேரிட வில்லையென்று என் தகப்பனார் கூறியது எனக்கு ஞாபகமிருக்கிறது. (சோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் கவனிப்பார்களாக)