Librería Samer Atenea
Kálamo Books
Librería Elías (Asturias)
Librería Kolima (Madrid)
Librería Proteo (Málaga)
ஸ்ரீமத் பகவத் கீதையின் இத் தமிழ் மொழிபெயர்ப்பு எத்தகையது என உரைக்க எனக்குப் போதுமான தமிழ் ஞானமில்லை, ஆயினும், ஒவ்வொரு ஹிந்துவும் ஸ்ரீமத் கீதையைப் பாராயணம் பண்ணாது ஒரு நாளாயினும் வீண்போக்குதல் கூடாது. இத் தகையோர்க்கு இம் மொழிபெயர்ப்புடன் கூடிய இக்கீதை பெரிதும் பயன்படும்.புத்தியிலே சார்பு எய்தியவன், இங்கு நற்செய்கை, தீச்செய்கை இரண்டையுந் துறந்து விடுகின்றான். ஆதலால் யோக நெறியிலே பொருந்துக, யோகம் செயல்களிலே திறமையாவது. (கீதை, 2-ஆம் அத்தியாயம், 50-ஆம் சுலோகம்)இஃதே, கீதையில் பகவான் செய்யும் உபதேசத்துக் கெல்லாம் அடிப்படையாம். புத்தியிலே சார்பு எய்தலாவது, அறிவை முற்றிலுந் தெளிவாக மாசுமறுவின்றி வைத்திருத்தல், தெளிந்த புத்தியே மேற்படி சுலோகத்திலே புத்தி என்று சொல்லப்படுகிறது. அறிவைத் தெளிவாக நிறத்திக் கொள்ளு தலாவது யாதென்றால், கவலை நினைப்புகளும் அவற்றுக்குக்காதாரமான பாவ நினைப்புகளு மின்றி அறிவை இயற்கை நிலைபெறத் திருத்துதல்.'நீங்கள் குழந்தைகளைப் போலானாலன்றி, மோக்ஷ ராஜ்யத்தை எய்த மாட்டீர்கள்' என்று இயேசு கிறிஸ்து சொல்லியதும் இதே கருத்துக் கொண்டுதான்.’குழந்தைகளைப் போலாய்விடுங்கள்’ என்றால், உங்களுடைய லௌகிக அனுபவங்களை யெல்லாம் மறந்து விடுங்கள்; நீங்கள் படித்த படிப்பையெல்லாம் இழந்துவிடுங்கள்; மறுபடி சிசுக்களைக் போலவே தாய்ப்பால் குடிக்கவும், மலழைச் சொற்கள் பேசவுந் தொடங்குங்கள்’ என்பது கொள்கையன்று. ’ஹிருதயத்தைக் குழந்தைகளின் ஹிருதயம்போல நிஷ்களங்கமாகவும் சுத்தமாகவும் வைத்துக் கொள்ளுங்கள்’ என்பது கருத்து.