Librería Samer Atenea
Kálamo Books
Librería Elías (Asturias)
Librería Kolima (Madrid)
Librería Proteo (Málaga)
இந்தப் புத்தகத்தில் நான்கு பாடல்களுக்குரிய விளக்கங்கள் இருக்கின்றன. ஐந்து பகைவர், குறிஞ்சிக் கிழவன், தனிப்பரமானந்தம், பேய் விளையாட்டு என்ற தலைப்பில் அவ்விளக்கங்கள் இதில் உள்ளன. பாட்டின் பொருளை மாத்திரம் பதவுரையாகவோ பொழிப்புரையாகவோ எழுதிவிடுவது மிக எளிது. இந்த நான்கும் சொற்பொழிவாகச் செய்த விளக்கம்.ஆதலால், சொல்லுக்குப் பொருள் உரைப்பதோடு நில்லாமல் அங்கங்கே உள்ள பொருள்களை வேறு செய்திகளோடு சார்த்தி விளக்கும் முறையில் இச்சொற்பொழிவுகள் அமைந்திருக்கின்றன. கந்த புராணத்திலுள்ள வரலாறுகள் வருமிடங்களில் அவற்றின் உள்ளுறையை என் அறிவுக்குப் புலனாகிய அளவுக்கு விளக்கியிருக்கிறேன். நம் நாட்டில் வழங்கும் புராணங்களில் வரும் கதைகள் நம்பத்தகாதன, குருட்டு நம்பிக்கையினால் எழுந்தன என்று சிலர் சொல்லுவார்கள். மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்ட நிகழ்ச்சிகளை வைத்துப் புனைந்த கற்பனைக் கதைகள் பல உண்டு; அத்தகைய அபூத கற்பனைகளில் வரும் நிகழ்ச்சிகள் முன்பு நடந்தவை அல்ல; இனியும் நடக்கப் போவன அல்ல. ஆனாலும் அவற்றைப் படித்து இன்புறுகிறார்கள் இக் காலத்து மக்கள். கதைகளில் பாத்திரங்களின் இயல்புகளும் அடிப்படையான உண்மைகளும் உள்ளுறையாக அமைந்திருப்பதால் அவற்றைத் தெரிந்து மகிழ்ச்சியடைகிறார்கள். அதே தெளிவு புராணக் கதைகளிலும் காணலாம். அவற்றிலுள்ள வரலாறுகள் அனைத்தும் அப்படியே நிகழ்ந்தன என்று கொள்ள வேண்டியது இன்றியமையாததன்று. அவற்றினூடே உள்ள கருத்துக்களை, அக்கதைகள் எந்த உண்மையை வெளிப்படுத்த அமைந்தனவோ அந்தக் குறிப்புக்களை, உணர்ந்தால் இப்போது தோன்றும் அபூத கற்பனைகளைச் சுவைப்பது போலவே புராணக் கதைகளையும் சுவைக்கலாம்.