Librería Samer Atenea
Kálamo Books
Librería Elías (Asturias)
Librería Kolima (Madrid)
Librería Proteo (Málaga)
தமிழர் நாகரிகம் திருக்கோயில்களை மையமாகக் கொண்டது. இந்த உண்மையினைத் திருக்கோயில் கல்வெட்டுகளும் திருமுறைகளும் எடுத்துக் கூறுகின்றன. புதுமை என்பது சூன்யத்திலிருந்து தோன்றுவதில்லை. முதிர்ந்த பழைமைதான் ஒரு புதுமையைப் பிரசவிக்கிறது. இதுவே வரலாற்றுண்மை. சிலர் பழைமையை மலடாக்கிப் புதுமையின் விரிவைத் தடை செய்து வருகின்றனர். இது வளரும் போக்குடைய வரலாற்றுக்கு முரண்பட்ட நிலை. பழைமையைப் புதுமையாக விரிவடையச் செய்து, ஒரு நல்ல சமுதாய அமைப்பைக் காண வேண்டும் என்ற ஆர்வத்தில் எழுந்தது இந்த நூல். இந்த நூலின் கருத்துக்கள் சார்பு நிலைகளினின்றும் விலகி விவாதிக்கும் பழக்கமுடையவர்களால் விவாதிக்கப்படுவதை வரவேற்கிறோம். மெய் கண்ட தேவர் முதல் கார்ல்மார்க்ஸ் வரை இந்நூலில் பேசப்பட்டுள்ளனர். சிந்திப்பவர்கள் இந்த நூலினை ஏற்பர் நம்புகிறோம்.தமிழ்நாடு, ஆலயங்கள் நிறைந்த நாடு, விண்ணளந்து காட்டி வினை மறைக்கும் திருக்கோயில்கள், தமிழ்நாட்டுக்கு அழகும் பொலிவும் ஊட்டுவன. கல்லெல்லாம் கலையாக்கி, பேசும் பொற் சித்திரமாக்கி, வழிபடும் தெய்வமாகவும் படைத்துக் காட்டிய திறம் தமிழர்க்கேயுரியது. சென்ற காலத்திலும் சரி, நிகழ் காலத்திலும் சரி, தமிழ்நாட்டின் வரலாற்றை இயக்குவதில் தமிழ்நாட்டுத் திருக்கோயில்கள் முக்கியமான பாத்திரத்தை வகித்து வந்துள்ளன. ஏற்றுக் கொண்டுள்ளன! தமிழ்நாட்டு மக்கள் வாழ்க்கையில், வளர்ச்சியில், மாற்றங்களில் மிகுதியும் பங்கு பெற்றிருந்தவை திருக்கோயில்களே என்பது வரலாறு கூறும் உண்மை. அன்றாட வாழ்க்கை முதல், மொழி, கலை, இலக்கியம், சமயம் ஈறான அனைத்துத் துறைகளிலும் திருக்கோயில்களுக்குப் பங்குண்டு.