அன்பர் அழ.வள்ளியப்பா இந்த அரிய 'பாட்டிலே காந்தி கதை' என்ற நூலைக் குழந்தைகளுக்காகவே இயற்றியிருக்கிறார். குழந்தைகளுக்காகப் பல பாடல்களைப் பாடிக் ’குழந்தைக் கவிஞர்’ என்று தமிழ் மக்கள் அன்புடன் பாராட்டும் நிலையில் இருப்பவர் இவர். குழந்தையின் உள்ளப் பாங்கை நன்கு அறிந்து, அவர்களுக்கு எளிதில் விளங்கும் சொற்கள் ஆண்டு, சிறிய சிறிய வாக்கியங்களை அமைத்து இதைப் பாடியிருக்கிறார். குழந்தைகள் தாளம் போட்டு உற்சாகமாகப் பாடும் வகையில் பாடல்கள் அமைந்திருக்கின்றன. நீதிகளையும் தத்துவங்களையும் விரித்துக் கூறிச் சோர்வடையச் செய்யாமல் உணர்ச்சியூட்டும் வகையில் நிகழ்ச்சிகளைச் சொல்லிக் கதையைப் பின்னியிருக்கிறார். குழந்தையோடு குழந்தையாகப் பழகிப் பெற்ற அனுபவமும், பாடிப் பாடிக் கைவந்த பழக்கமும் அழ.வள்ளியப்பாவின் பாடல்களுக்கு மதிப்பை உண்டாக்கியிருக்கின்றன.